முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 130 அடியாக குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசு சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அணையின் மதகுகளை திறப்பதற்கான புதிய அட்டவணை மற்றும் அணையின் நீர்மட்டம் குறித்த விவரங்கள் அளிக்கப்படவில்லை என்ற கேரள அரசின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் அறிவுரைப்படி அணையின் மதகுகளை திறக்க புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டதை தமிழக அரசு சுட்டிக்காட்டியது. மேலும், நீர் திறப்பதற்கு முன் கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தமிழக அரசின் பதில் மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், நீர்மட்டத்தை குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு துணைக்குழுவை கலைக்கக் கோரிய தாக்கல் செய்யப்பட மனு மீது மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post