ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை வரவேற்று, காளை வளர்ப்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை, சில கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 50 சதவிகித பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் காளையர்களும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர்களும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
காளைகளுக்கு நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண் பறிப்பது, மாடுபிடி வீரர்கள் அருகில்
வந்தால் எவ்வாறு தப்பிச் செல்வது போன்ற பயிற்சிகளை காளை உரிமையாளர்கள் அளிக்கத் தொடங்கியுள்ளனர். காளைகளுக்கு பயிற்சி அளிக்க நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து வருவதாகவும், ஜல்லிட்டு போட்டிக்கு அனுமதி அளித்த முதலமைச்சருக்கு மிகுந்த நன்றி என்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் மாவட்ட தலைவர் முரளி மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா இல்லையா என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையில், முதலமைச்சர் பழனிசாமி அனுமதி வழங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக காளை வளர்ப்பாளர் கார்த்திக் கூறுகிறார்.
பேரிடருக்கு மத்தியிலும் தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து, தமிழ் மண்ணின் வீரமிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை நேரிலும், தொலைக்காட்சிகளிலும் காண உலகமே காத்திருக்கிறது. சீறிப் பாயும் காளைகளை அடக்கி, பரிசுகளை குவிக்க காளையர்களும் காத்திருக்கின்றனர்.
Discussion about this post