ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பரவும் மர்ம நோய் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு இன்று ஆய்வு செய்ய உள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில், கடந்த 4 ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூவர் திடீரென வாந்தி, மயக்கத்துடன் கீழே விழுந்தனர். இதே போல, அடுத்தடுத்த நாட்களில், மக்கள் தொடர்ந்து மயங்கி கீழே விழுந்த நிலையில், இதுவரை 18 குழந்தைகள் உள்பட 350 பேர், இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால், ஒரு சிலர் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மர்ம நோயின் பின்னணி குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், என்ன நோய் என்று கண்டறிய மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றையும் நியமித்துள்ளார். இதே போல, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஒரு குழுவும் ஏலூர் மருத்துவமனைக்கு வந்துள்ளது. மக்கள் எதனால் மயங்கி விழுகின்றனர் என்பது தெரியாத நிலையில், குடிநீர் கலப்படத்தால் ஏற்பட்ட பாதிப்பா? அல்லது சதிச் செயலா? என்பது குறித்து மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post