நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் நேரில் ஆஜராக வேண்டுமென்ற சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை கிண்டியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது, முறைகேடான ஆவணங்கள் மூலம் அவரது மனைவி பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக, பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான வழக்கு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வரும் 15ஆம் தேதி இவ்வழக்கில் மா.சுப்ரமணியன் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மா.சுப்ரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டுமென, அவரது வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க மறுத்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்து, வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Discussion about this post