அ.தி.மு.க.-வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், அ.தி.மு.க.-வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார். அடுத்துவரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒற்றுமையே பலம்” என்பதை நிரூபிக்கும் வகையில், அ.தி.மு.க.-வை வழிநடத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலானக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனை தொடர வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அ.தி.மு.க. உடைந்து விடும் என்று மனக்கோட்டை கட்டியவர்கள் இன்று ஏமாந்து போனதாகவும், அ.தி.மு.க. தலைமையிலானக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post