அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார்.
2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க.-வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதே போன்று, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வருகை தந்தார்.
முதலமைச்சரை, துணை முதலமைச்சர் மலர்கொத்து வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தினார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் வேட்பாளராக தன்னை தேர்வு செய்ததற்காக, துணை முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்று நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தனர்.
Discussion about this post