உள்ளாட்சி அமைப்புக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
கொரோனா பேரிடர் காரணமாக, தமிழக சட்டப்பேரவை மூன்று நாட்கள் நடத்த திட்டமிட்டு, கடந்த 14ஆம் தேதி முதல் கூட்டம் தொடங்கியது. கடைசி நாளான இன்று, கேள்வி நேரத்திற்குப் பிறகு 18 சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. உள்ளாட்சி அமைப்புக்கான தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை, மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதாவை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் தனி அலுவலர்களின் பதவிக் காலம் கடந்த ஜூன் 30-உஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, பேரவையில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கொரோனா தொற்று சரியான பிறகு, உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதைத்தொடர்ந்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதாவும் பேரவையில் நிறைவேறியது. இதன் மூலம் வேதா இல்லத்தின் அசையும், அசையா சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டு, ஜெயலலிதா பயன்படுத்திய புத்தகங்கள், நகைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
அதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இணைப்பு அந்தஸ்து பெற்ற கல்லூரிகளின் நிர்வாக வசதிக்காக, தனி அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். அதில், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்பம், ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து செயல்படும். ஏற்கனவே சிறப்பு அந்தஸ்து பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேம்பாட்டில் ஈடுபடும்.
மேலும், திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்திருத்த மசோதாவும் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இச்சட்டத்திருத்தத்தின் மூலம் திருமணம் நடைபெறும் இடத்திற்கு பதிலாக, மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைதொடர்ந்து, பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, மொத்தம் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. பின்னர், , சபாநாயகர் தனபால், மறு தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.
Discussion about this post