லடாக் எல்லையில் துப்பாக்கிச்சூடு ஏதும் நடத்தவில்லை என, இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில் பேங்கோங் த்சோ (Pangong Tso) ஏரி அருகே சென்பாவு என்ற இடத்தில், இந்திய ராணுவம் அத்துமீறியதாகவும், தங்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. எல்லையில் படைகளை பின்வாங்கியதுடன் அமைதியை ஏற்படுத்தும் பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் சீனா தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சீனா கூறியது போல் எல்லையில் இந்தியா அத்துமீறவில்லை என்றும், துப்பாக்கிச்சூடு ஏதும் நடத்தவில்லை எனவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே வந்த சீனப்படைகள், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை பேண இந்தியா கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராணுவம், அதே நேரத்தில் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
Discussion about this post