திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், பட்டியலின பெண் தலைவருக்கு, சுதந்திர தினத்தன்று கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், கடந்த டிசம்பர் மாதம் பட்டியலின பெண் தலைவர் அமிர்தம், ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே, துணைத் தலைவர் ரேவதி விஜயகுமார் மற்றும் ஊராட்சி செயலர் சசிக்குமார் ஆகியோர் பணி செய்ய விடாமல் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சுதந்திர தினத்தன்று, ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை கொடியேற்ற விடாமல் தடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தி சேகரிக்க வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரும் தாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு, மாநில மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிடோருக்கு நோட்டீஸ் அனுப்பிருந்தது. இந்த நிலையில், இன்று ஊராட்சி மன்ற அலுவலக வாயிலில், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பெயர் எழுதப்பட்டு, புதியதாக கொடிக்கம்பம் நடப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் முன்னிலையில், ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
Discussion about this post