இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டதால், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக பெறப்படும் இ-பாஸ் முறையை, தமிழக அரசு எளிமைப்படுத்தியுள்ளது. இதுவரை, திருமணம், இறப்பு, மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வருபவர்களின் எண்ணிக்கையும், சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் எண்ணைக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கின்றன.
Discussion about this post