முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்தாண்டு 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்னை விவசாயிகளுக்கு கொப்பறை தேங்காய்க்கு அதிக விலைநிர்ணயம் பெற்றுத் தரப்பட்டதாகவும், நீராபானம் தயாரிக்க அனுமதி அளித்ததன் மூலம் இரட்டிப்பு வருமானம் கிடைத்ததாகவும் கூறினார். குடிமராமத்து திட்டம் மூலம் பொதுப்பணித்துறையிலுள்ள 40 ஆயிரம் ஏரிகளை தூர்வாரும் பணியை அரசு செய்துவருவதாகவும், விவசாயிகள் பங்களிப்புடன் நடைபெறும் இந்தப் பணிகள் மூலம் கோடை காலத்திலும் விவசாயத்துக்கு தேவையான நீர்கிடைக்கும் எனத் தெரிவித்தார். 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தடுப்பணைகளை கட்டப்பட்டு வருவதாகவும், விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு திட்டம் மூலம் 8 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் இழப்பீட்டு தொகை பெற்றுத் தரப்பட்டதாகவும் கூறினார்.
Discussion about this post