பல கனவுகளோடு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த புதுப்பெண்ணுக்கு, அமெரிக்க மாப்பிள்ளையால் அதிர்ச்சி காத்திருந்தது… என்ன நடந்தது? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயது இளைஞர் பாஸ்கர். அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே பணி செய்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் பாஸ்கருக்கும், குண்டூரைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. பெண் வீட்டார் சார்பில், 50 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், 70 சவரன் நகை வரதட்சணையாக தரப்பட்டுள்ளது.
மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த அந்த பெண்ணுக்கு, ஏமாற்றமே காத்திருந்தது. தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி புதுப் பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் உறங்கச் சென்றார் புதுமாப்பிள்ளை பாஸ்கர். முதல்நாள் தானே என்று இதை பெரிதாக எடுத்துகொள்ளாமல் விட்டார் புதுப்பெண்.
ஆனால், இதே கதை தான் ஒரு வாரமாக தொடர்ந்தது. இதனால் ஏமாற்றமடைந்த புதுப்பெண்ணுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, இறுதியில் தனது தோழிகள் மூலம் தனது பெற்றோருக்கு இந்த சங்கடத்தை தெரியப்படுத்தினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பாஸ்கரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். எல்லோரும் சேர்ந்து விசாரித்த போது, உண்மையை போட்டு உடைத்தார் அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளை. அமெரிக்காவில் வசிக்கும் தனது ஆண் நண்பருடன் ஓரினச்சேர்க்கை உறவில் உள்ளதாகவும் தற்போதைய திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் அவர் கூலாக கூறியுள்ளார்.
அதிர்ந்துபோன புதுப்பெண் விரக்தியில் தனது தாய்வீட்டுக்கு சென்று புலம்பியுள்ளார். மாப்பிள்ளையிடம் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் போட்ட நிபந்தனை புதுப்பெண்ணின் இதயத்தை சுக்குநூறாக உடைத்து விட்டது. தனக்கு மட்டுமல்ல, தன்னுடைய நண்பனுக்கும் மனைவியாக இருக்க சம்மதித்தால் சேர்ந்து வாழலாம் என்பதுதான் அந்த அமெரிக்க மாப்பிள்ளை போட்ட கண்டிஷன்.
கணவனின் விபரீத நிபந்தனையைக் கேட்டு அதிர்ந்து போன பெண்ணின் பெற்றோர் அமெரிக்க மாப்பிள்ளை பாஸ்கர் மீது குண்டூர் புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் அமெரிக்க மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோரை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post