லடாக் எல்லை பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ராணுவத்திற்கு வலு சேர்க்கும் விதமாக வரும் 29ம் தேதி ரபேல் போர் விமானங்கள் இந்தியா வரவுள்ளன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 நவீன ரக ரபேல் போர் விமானங்கள் வாங்க, 2016ம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில், முதற்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள், வரும் 29ம் தேதி இந்தியா வர உள்ளன. இந்த விமானங்கள் அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் வந்திறங்கும் என்றும், பின்னர் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ள விழாவில் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளதாகவும், இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கட்டுப்படுத்த ரபேல் ரக போர்விமானங்களை பயன்படுத்திட இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், விமானப்படைக்கு மேலும் வலுசேர்க்கும் என கூறப்படுகிறது.
Discussion about this post