சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில், சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று முதல், சிபிஐ அதிகாரிகள் விசாரணையை முறையாக துவங்க உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, வழக்கில் சிபிஐ விசாரணையை துவங்க அதிகார பூர்வமாக அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைக்காக சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் டெல்லியிலிருந்து மதுரை வந்தனர். பின்னர், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்ற அவர்களிடம், சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நெல்லை சென்ற சிபிஐ அதிகாரிகள், அங்குள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர். இன்று முதல், வழக்கு தொடர்பான நபர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
Discussion about this post