சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த லத்தி மற்றும் அனைத்து ஆவணங்களும், மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்நிலையத்தில் தந்தை, மகன் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட லத்தி, கம்பு போன்றவையும், ரத்த மாதரி மற்றும் ரத்தக்கறை படிந்த போர்வை மற்றும் துணிகளை சிபிசிஐடி போலீசார், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் அனைத்தும் மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தின் வரம்பிற்குட்பட்ட மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கின் அனைத்து ஆவணங்கள் மற்றும் தடயங்கள், பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அனைத்தையும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள், மதுரை மாவட்ட நீதிபதி ஹேமந்த் குமார் முன்னிலையில் ஒப்படைத்தனர். இதனிடையே, மதுரை சிபிஐ அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். விரைவில் இவர்கள் சாத்தான்குளத்தில் விசாரணையை தொடங்க உள்ளனர்.
Discussion about this post