சென்னை வந்துள்ள 7 பேர் கொண்ட மத்திய குழுவினர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் கண்காணிப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னு, மின்னணு மருத்துவ ஆவண இயக்குநர் டாக்டர் ரவீந்திரன், தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இணை இயக்குநர் சுகாஷ் தண்டோர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இன்று காலை மத்திய குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற மத்திய குழுவினர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட், நந்தம்பாக்கத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய குழுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.
Discussion about this post