பொள்ளாச்சி அருகே உள்ள பழங்குடியின மாணவி, கேரளாவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பூச்சகொட்டாம்பாறை எனும் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிக்கும் செல்லமுத்து என்பவரது மகள் ஸ்ரீதேவி, கேரளா மாநிலம் சாலக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். கொரோனா தொற்று காலத்திலும் மனதை திடப்படுத்தி தேர்வு எழுதிய ஸ்ரீதேவி அதிக மதிப்பெண்களைப் பெற்று ஏ பிளஸ் கிரேட் தேர்ச்சி பெற்றுள்ளார். மருத்துவம் பயின்று மருத்துவ சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ள மாணவி ஸ்ரீதேவிக்கு பழங்குடியின மக்களும் ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறை சார்பில் மாணவிக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கியதுடன் படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.
Discussion about this post