மின் கட்டணம் குறித்து உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டுள்ளதாக, திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இளம் பெண்ணை தி.மு.க பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைப்பதற்காக செந்தில்பாலாஜியை வைத்து, மின்சாரத்தின் பெயரில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் தமிழக அரசின் முனைப்பான நடவடிக்கைகளை நாடே, பாராட்டுவதை பொறுக்க முடியாமல், அறிக்கைகள் என்னும் பெயரில் திமுக அருவெறுப்பு அரசியலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்த வரிசையில் மின்கட்டணத்தை கூடுதலாக வசூலிப்பதாக செந்தில் பாலாஜியை வைத்து திமுக வெளியிட்டிருக்கும் அறிக்கை உண்மைக்கு மாறானது என குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்ட காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால், அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு கூடுதலாக இருக்கும் என்பது இயல்பு எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். கொரோனா காலத்தில், வீடுகள், மற்றும் அலுவலகங்களுக்கு மின் அளவை கணக்கெடுப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களை கருத்தில் கொண்டு முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவையே அடுத்தடுத்த மாதங்களுக்கும் கணக்கிட்டு, மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார். மின்கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கிறார்கள் என்கிற உணர்வையும், அவப்பழியையும் அரசு மீது சுமத்த திமுக தொடர்ந்து திட்டமிட்டு, விஷம பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மின் கட்டண கணக்கீட்டில் தவறு இழைக்கப்பட்டிருந்தால் அதற்கான சட்ட முறையீடும் மின் பயனீட்டாளர்களுக்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, பணி வழங்குவதாக கூறி, பலரிடம் பணம் பெற்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றிருக்கும் செந்தில் பாலாஜி, முதலமைச்சரைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
Discussion about this post