திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரி சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்வா விற்பனையில் உலகம் முழுவதும் பெயர் பெற்ற நிறுவனம் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா. வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களிலிருந்து திருநெல்வேலிக்கு வரும் பயணிகள் இருட்டுக்கடை அல்வாவை விரும்பி வாங்கிச் செல்வது வழக்கம். அந்தளவுக்கு பெயர் பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை தினசரி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்குள் 2 ஆயிரம் கிலோ அல்வா விற்பனையை முடித்து விடுவார்கள். அல்வா வாங்க பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்வதுண்டு. இந்நிலையில் இருக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங் மற்றும் அவரது மருமகனுக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. பெருமாள் புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் திடீரென ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக அல்வா வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த ஹரி சிங்கின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post