திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ள நிலையில், கோயிலில் பக்தர்கள் மொட்டை போட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், 5வது கட்ட ஊரடங்கில் வரும் 8-ம் தேதி முதல் கோயில்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், 83 நாட்களுக்கு பிறகு 11-ம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கூறியுள்ளனர். மேலும், சிவப்பு மண்டலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், ஒரு நாளில் மொத்தம் 7 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர். பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ள அதிகாரிகள், பக்தர்கள் மொட்டை போட அனுமதி இல்லை எனவும் தெரிவித்தனர்.
Discussion about this post