ஆம்பன் புயலால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆம்பன் புயலானது, தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று, தெற்கு வங்கக் கடலில், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 660கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு கிழக்கே சுமார் 650கிலோ மீட்டர் தொலைவிலும், மையம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்றும், நாளையும் மேற்கு வங்கக் கடல் நோக்கி நகரும் என்பதால், அப்பகுதியில் 110 கிலோமிட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தேனி, கோவை, திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post