கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிறப்பிக்கப்பட்ட 3ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பொது இடங்கள் மற்றும் பணியாற்றும் இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும், உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள், மெட்ரோ ரயில்கள் இயக்குவதற்கான தடை நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை வரையறுப்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும், பேருந்து சேவைகளை அனுமதிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை இயக்குவது குறித்து பரஸ்பரம் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகள் சரக்கு போக்குவரத்தை பரஸ்பரம் அனுமதிக்க வேண்டும் எனவும், நிறுவனங்கள் முடிந்த அளவு ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீடிக்கப்படுவதாகவும், பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும், அனுமதிக்கப்பட்ட கடைகளில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், 6 அடி இடைவெளி அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம் எனவும், இறுதிச்சடங்கில் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அனுமதித்தால் சலூன் கடைகளை திறக்கலாம் என்றும், அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post