தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும், பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவின் படியும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தால் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடையில் விலையின்றி வழங்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். கட்டட தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்குக்கும் இரண்டாவது முறையாக தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படுமென முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையில் பேக்கிரி இயங்க தடையில்லை எனவும், ஏற்கெனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி பேக்கிரிகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோயை தடுக்க தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post