கொரோனா பாதிப்பு மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் ஜூலை 31ம் தேதி வரை இயக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படையாத பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 121 குடிநீர் ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 569 குடிநீர் ஆலைகள் அளித்த விண்ணப்பங்கள் குறித்து ஜூலை 31க்குள் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும், உரிமம் வழங்கப்பட்டுள்ள ஆலைகளை தவிர, விண்ணப்பித்துள்ள குடிநீர் ஆலைகளையும் தற்காலிகமாக ஜூலை 31ம் தேதி வரை இயங்க அனுமதி அளிக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதம் தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Discussion about this post