விவசாயிகள் மீது தடியடி என்பது அராஜகத்தின் உச்சக்கட்டம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவாதி குற்றம்சாட்டி உள்ளார்.
உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பேரணி காசியாபாத் பகுதியைக் கடந்து உத்தரப்பிரதேசம் – டெல்லி எல்லைப் பகுதியை வந்தடைந்தது.
டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் ராஜ்காட் செல்லும் பாதையில் போலீசார் தடுப்பு வேலி அமைத்துத் தடுத்து நிறுத்தினர். அப்போது, தடுப்பை மீறி நுழைய முயன்ற விவசாயிகள் மீது, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, போலீசார் விரட்டி அடித்தனர். விவசாயிகள் மீது தடியடியும் நடத்தினர். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, மத்திய அரசின் இந்த செயல்பாட்டுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், காந்தி ஜெயந்தி அன்று டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது மத்திய அரசு தலைமையிலான பா.ஜ.க. அரசு, காட்டு மிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளதாகவும் விமர்சித்தார். இந்தத் தாக்குதல் அராஜகத்தின் உச்சக்கட்டம் என்றும் பாஜக அரசு மீது மாயாவதி குற்றம்சாட்டினார்.
Discussion about this post