ஜி.எஸ்.டி. வரி கட்டுபவர்களின் ரசீதுகள் ஒவ்வொன்றும் லாட்டரி சீட்டுகளாக மாற உள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. லாட்டரி திட்டம் குறித்து பார்ப்போம்…
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி. நாடெங்கும் அமலுக்கு வந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வு வாடிக்கையாளர்களிடம் குறைவாகவே உள்ளது. ஜி.எஸ்.டி. வரி செலுத்தி பொருட்களை வாங்கும் பலரும், அதற்கு உரிய ரசீதை வாங்குவது இல்லை. இதனால் வாடிக்கையாளர் ஏமாற்றப்படவோ, வரி ஏய்ப்பு நடக்கவோ வாய்ப்பு ஏற்படுகின்றது.
எனவே கடைக்காரர்களிடம் ஜி.எஸ்.டி. செலுத்திப் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் உரிய ரசீதுகளைக் கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக ‘ஜி.எஸ்.டி. லாட்டரி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்தத் திட்டம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
இந்தத் திட்டத்தின்படி, ஜி.எஸ்.டி. கட்டி வாங்கப்படும் பொருட்களுக்கான ஒவ்வொரு ரசீதும் ஒரு லாட்டரி சீட்டாகக் கருத்தில் கொள்ளப்படும். இந்த ஜி.எஸ்.டி. லாட்டரி சீட்டுகளுக்கு இடையே நடைபெறும் குலுக்கலில் வெற்றிபெறும் ஜி.எஸ்.டி. லாட்டரி சீட்டுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான தொகை பரிசாக வழங்கப்படும்.
இந்த ஜி.எஸ்.டி. லாட்டரி சீட்டுக் குலுக்கலில் பங்குபெற விரும்பும் ஒரு வாடிக்கையாளர், ஜி.எஸ்.டி. கட்டணம் செலுத்தி பொருள் வாங்கிய ரசீதை தனது செல்போனில் படம்பிடித்து அதனை ‘ஜி.எஸ்.டி. நெட்வொர்க்’ என்ற செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குலுக்கலில் பணப் பரிசு கிடைத்தால், இந்தச் செயலி மூலமாகவே அதனை அறிந்து கொள்ளலாம். இந்த செயலி மார்ச் மாத இறுதிக்குள் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த ஜி.எஸ்.டி. லாட்டரி குலுக்கலில் பங்குபெற விரும்பும் நபர் எந்த ஒரு தொகைக்கும் பொருளை வாங்கி இருக்கலாம், இங்கு விலை என்பது முக்கியம் அல்ல, வாடிக்கையாளரின் விழிப்புணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜி.எஸ்.டி. வரி கட்டிப் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் ரசீதுகளைத் தவறவிடாதீர்கள்!.
Discussion about this post