தமிழக சட்டப்பேரவை வரும் 9ம் தேதி கூடவுள்ள நிலையில், மானியக்கோரிக்கை மீதான விவாதம் குறித்து முடிவெடுக்க, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் 2020-21 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர், சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், வருகின்ற 9 ஆம் தேதி மானியக் கோரிக்கை மீதான விவாத்திற்காக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்திருந்தார். இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற உள்ளது. மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்த நாட்களில் எந்த மானிய கோரிக்கை தொடர்பாக விவாதம் நடத்துவது போன்றவை குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
Discussion about this post