புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் நான்கு நபர்கள் 5 ஐம்பொன் சிலைகளை விற்க முயல்வதாக சிலை கடத்தல் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலை கடத்தல் காவல்துறையினர், காவலர் ஒருவரை, சிலை வாங்குவது போல் நடிக்க வைத்து 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலை, சோமகஸ்கந்தர் சிலை, பார்வதி அம்மன் சிலை, சிவகாமி அம்மன் சிலை, மாணிக்கவாசகர் சிலை மற்றும் ஒரு சிலை பீடத்தையும் மீட்டனர்.
இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏடிஜிபி அபய்குமார் சிங், ஐ.ஜி. அன்பு மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் சர்வதேச மதிப்பு 20 கோடி ரூபாய் என்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட வெள்ளைச்சாமி, அரவிந்த், குமார் மற்றும் மதியழகன் ஆகிய 4 பேரும் கல்குவாரியில் பொக்லைன் ஆபரேட்டர்களாக வேலை செய்து வருவதாகவும், இவர்களுக்கு சிலைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினர்.
Discussion about this post