ராணிப்பேட்டையில், மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மன உளைச்சலில் தனது இரண்டு மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்-நிர்மலா தம்பதியினருக்கு, 2 வயது மற்றும் 1 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். ராணிப்பேட்டையில் மகள்களுடன் வசித்து வந்த நிர்மலா குடும்பத் தகராறில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்து பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய வெங்கடேசன், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் தனது மனைவியின் உடலை பெற வந்துள்ளார். மனைவியின் தற்கொலையால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன், தனது இரு மகள்களுடன் வாலாஜாப்பேட்டை ரயில் நிலையத்தில், பெங்களூரு நோக்கி சென்ற சதாப்தி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Discussion about this post