சென்னையில் நாளை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 7 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
விழா ஏற்பாடுகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 31 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றதாக கூறினார்.
அதேபோன்று, சென்னையில் நாளை நடைபெறும் நிறைவு விழா மிகச் சிறப்பாக அமையும் என்று அவர் கூறினார். இந்த விழாவில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் காங்கிரஸ் – திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதை சுட்டிக் காட்டிய அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வராது என உறுதி அளித்தார்.
Discussion about this post