ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் நடைபெற்றது. 13 காளைகளை தழுவிய மதுரையை சேர்ந்த கார்த்திக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவையுடன், நியூஸ் ஜெ தொலைக்காட்சி இணைந்து இரண்டாம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 6 ஆயிரம் பேர் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்க்கும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. 330 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர். மின்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தனர். பாரம்பரிய முறைப்படி கோயில் காளைகளுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு பிடிக்க முயன்றனர். களத்தில் நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
களத்தில் திமிறிய காளைகளை, காளையர்கள் பாய்ந்து பிடித்த காட்சியை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
13 காளைகளை தழுவிய மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவர் சிறந்த மாடு பிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. விரதமிருந்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டதாக முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் கார்த்திக் தெரிவித்தார்.
11 காளைகளை தழுவி இரண்டாம் இடம் பிடித்த கார்த்திக் என்ற மற்றொரு இளைஞருக்கு குளிர்சாதன பெட்டி பரிசாக வழங்கப்பட்டது. 8 காளைகளை தழுவி மூன்றாம் இடம் பிடித்த நாமக்கலை சேர்ந்த சபரி என்பவருக்கு டிரெசிங் டேபிள் பரிசாக வழங்கப்பட்டது.
களத்தில் நின்று விளையாடி, வீரர்களுக்கு சவால் விடுத்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தவமணி என்பவரது காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு உரிமையாளருக்கு இருசக்க வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கோப்பை பரிசாக வழங்கப்பட்டன.
Discussion about this post