உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 7 ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மின்துறை அமைச்சர் தங்கமணி பிரசாரம் மேற்கொண்டார். புதுசத்திரம், மோகனூர் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்த அமைச்சர் தங்கமணி மற்றும் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, நல்ல திட்டங்களை நிறைவேற்றும் அதிமுக ஆட்சி வேண்டுமா..?, திட்டங்களை தடுக்கும் திமுக ஆட்சி வேண்டுமா..? என்பதை சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் கூவக்காபட்டியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், திமுகவில் கருணாநிதிக்கு அடுத்தபடியாக ஸ்டாலின், அவரை தொடர்ந்து உதயநிதி என தொடர்ந்து வாரிசுகள் பொறுப்பில் இருப்பதாக கூறினார். திமுக கட்சி ஸ்டாலின் குடும்பத்திற்காக பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நல்லாட்சி வழங்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை குறிப்பிட்டார். அதிமுக அரசின் நல்லாட்சிக்கு இதுவே சான்று என பெருமிதம் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக அரசின் சாதனைகளையும், நலத்திட்டங்களை விளக்கி அவர் வாக்கு சேகரித்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post