இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குப்பனாபுரம், சொக்கலிங்கபுரம், கழுகாசலபுரம், குருமலை, அன்னை தெரசா நகர் உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், பொங்கல் பரிசு கொடுத்து வாக்கு கேட்க வேண்டிய நிலையில் அதிமுக இல்லை என்றார்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம் செய்தார். நாடாளுமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுக வெற்றி பெற்றதை அமைச்சர் நினைவுகூர்ந்தார். திமுகவின் பொய்களை புரிந்து கொண்டதால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளித்ததாக கூறினார். இடைத்தேர்தல் முடிவுதான் உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலிக்கும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரசாரம் செய்தார். அப்போது, அமைச்சர் மற்றும் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், பிரசாரத்திற்கு செல்லுமிடம் எல்லாம் அதிமுகவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தார். குடிமராமத்து போன்ற பல்வேறு நல்ல திட்டங்களால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.
Discussion about this post