எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்கெட்டிற்கு வந்துள்ளதால் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாட்டை போக்க 1 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில் முதல் கட்டமாக 40 டன் வெங்காயம் எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வந்தடைந்தது.
இதன் மூலம் கடந்த சில நாட்களாக 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயத்தின் விலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெரிய ரக எகிப்து வெங்காயம் கிலோவிற்கு 100 ரூபாயாகவும், இந்திய வெங்காயம் கிலோவிற்கு 120 ரூபாய் முதல் 140 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து அதிகரித்துள்ளதால் வரும் காலங்களில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கோவை எம்.ஜி.ஆர் சந்தைக்கு வந்தடைந்துள்ள பெரிய வெங்காயம் கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு வாரகாலத்திற்குள் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு 40 ரூபாயாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post