தமிழர்களைச் சம உரிமையுள்ள குடிமக்களாக நடத்துவதற்கு வழிவகுக்கும் 13ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தும் என நம்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தினார். இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடைபெற்றது. அதன்பின் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் இலங்கையுடனான உறவுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். பயங்கரவாதச் செயல்களை இந்தியா எப்போதும் கண்டித்து வருவதுடன், அதற்கு எதிராகப் போராடியும் வருவதாக மோடி குறிப்பிட்டார். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு இந்தியா 360 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும் எனவும் மோடி தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இரண்டாயிரத்து 870 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக ஏற்கெனவே 46 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுத்துள்ள நிலையில் மேலும் 14 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். இலங்கையில் சூரிய ஒளி மின் திட்டத்துக்காக இந்தியா 720 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும் எனவும் தெரிவித்தார். தமிழர்களின் சமத்துவம், நீதி, சமாதானம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் 13ஆவது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதன் பின்பு, கூட்டறிக்கையின்போது பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, தமிழக மீனவர்களின் பிரச்சனை பற்றிப் பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார். இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோத்தபய ராஜபக்ச தெரிவித்தார்.
Discussion about this post