காவல்துறை, தீயணைப்புத் துறை, லஞ்ச ஒழிப்புதுறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் முதல்வர் பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்தார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், அத்திவரதர் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்ட 60 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார். காவல்துறை, தீயணைப்புத் துறை, லஞ்ச ஒழிப்புதுறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 596 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் மற்றும் முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்பட்டன. வீர தீர செயலுக்கான பதக்கம் மற்றும் தலா 5 லட்சம் ரூபாய் வெகுமதி 6 காவலர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதிக்கு, 2019ஆம் ஆண்டின் அத்திவரதர் சிறப்பு பணி பதக்கத்தை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வருவதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், சட்ட ஒழுங்கை காத்த தமிழக காவல்துறையை வெகுவாக பாராட்டினார். பிரதமர் மோடி – சீன அதிபரின் வரலாற்று சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது தமிழக சட்ட ஒழுங்கிற்கு கிடைத்த மகுடம் என்று அவர் கூறினார்.
Discussion about this post