தாராபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்காக உயர் நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பரப் பதாகை, கொடிக் கம்பங்களை வைத்ததுடன், தடை செய்யப்பட்ட நெகிழியையும் பயன்படுத்தியுள்ளது கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக இளைஞரணி சார்பாக அண்ணா பிறந்த நாளையொட்டி மாணவ மாணவியருக்குப் பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சாமிநாதன் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்துக்காக மண்டபத்தின் அருகே சாலையோரத்தில் மிகப்பெரிய விளம்பரப் பதாகை வைத்திருந்தனர்.
அத்துடன் சாலையின் இருபுறமும் அரைக் கிலோமீட்டர் தொலைவுக்குத் இரும்புக் குழாய்களில் திமுக கொடிகளைக் கட்டி நட்டிருந்தனர். சாலையோரத்தில் விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கும், கொடிக் கம்பங்களை நடுவதற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், திமுகவினர் அந்த உத்தரவை அப்பட்டமாக மீறியுள்ளனர்.
மேலும், அக்கட்சி தலைவர் ஸ்டாலினின் உத்தரவையும் மீறி இருப்பது, தலைவர் பேச்சை தொண்டர்கள் ஏற்காமல் நடந்து வருவது தெளிவாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் கூட்டம் நடைபெற்ற அரங்கில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post