திருச்சி லலிதா நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிடிபட்ட மணிகண்டன் அளித்த தகவலின்பேரில் 5 பேரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டை சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி கடையின் பின்புறச் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்றனர். நகைக்கடையில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியில் விலங்கு போன்ற முகமூடி அணிந்து இருவர் நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்துக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துக் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தை மறித்தபோது அதிலிருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை மடக்கிப் பிடித்துத் திருவாரூர் காவல்நிலையத்துக்குக் கொண்டுசென்று விசாரித்ததில் அவர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. அவர் பையில் வைத்திருந்த 5 கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர் சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது. மணிகண்டன் வைத்திருந்த நகைகள் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது எனத் தெரிந்ததால் மேல் விசாரணைக்காக அவரைப் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்குக் கொண்டுசென்றனர்.
தப்பி ஓடிய சீராத்தோப்பு சுரேசைக் கண்டுபிடிப்பதற்காகத் திருவாரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மணிகண்டன் அளித்த தகவலின்பேரில், 5 பேரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post