‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ தகவல் திருட்டு விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனும் முகநூல், சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. அதில், தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை பகிரப்படுகிறது. இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் செயல்படும் தேர்தல் தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’, ‘பேஸ்புக்’ பயனர்கள் 5 கோடி பேரின் தகவல்களை திருடியது தெரியவந்தது. இது, அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ‘பேஸ்புக்’ நிறுவனம் மன்னிப்பு கோரியது. இதனிடையே இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுவதாகவும் புகார் எழுந்தது.
‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ மற்றும் ‘குளோபல் சயின்ஸ் ரிசர்ச்’ போன்ற நிறுவனங்கள் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் உதவியுடன் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ள சி.பி.ஐ., ‘பேஸ்புக்’, ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’, ‘குளோபல் சயின்ஸ் ரிசர்ச்’ ஆகிய நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், இந்த நிறுவனங்கள் தகவல்களை சேகரிப்பதற்கு மேற்கொண்டு வரும் வழிமுறைகள் குறித்து தெரிவிக்குமாறு சி.பி.ஐ. கேட்டுக்கொண்டுள்ளது. இந்த முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகு, இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Discussion about this post