விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது நீதிமன்றத்தை தகாத வார்த்தைகளால் பேசியது தொடர்பாக, எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில், நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின்போது, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தடையை மீறி ஊர்வலம் சென்றார். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதிமன்றத்தையும், போலீசாரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த பல்வேறு தரப்பினரும், எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நீதிமன்றத்தைத் தவறாக சித்தரித்துப் பேசியதால் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், எச்.ராஜாவிற்கு எதிராக வழக்கு, தானாக முன்வந்து விசாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு, எச்.ராஜா மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.
இதனிடையே, எச்.ராஜா நீதிமன்றம் பற்றி தவறாகப் பேசியது தொடர்பாக, சிடி செல்வம், நிர்மல் குமார் அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. மேலும், எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஏற்கனவே எச்.ராஜா மீது, தடையை மீறி ஊர்வலம் சென்றது, நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியது, பொது இடத்தில் தகாத வார்த்தையால் திட்டியது, அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டுவது, பிற மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் பேசியது உட்பட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எச்.ராஜாவைக் கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, 4 வாரத்திற்குள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post