கரூர் அருகே 79 வயதிலும் டிராக்டர் ஓட்டி உற்சாகமாக விவசாயம் செய்து முன்னுதாரணமாக திகழும் பெண்மணி
கரூர் அடுத்துள்ள ராமாக்கவுண்டனூர் பகுதியை சார்ந்தவர் யோக ராஜ வையாபுரி .. இவருடைய மனைவி, அம்மையக்காளுக்கு 79 வயதாகிறது… இவர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
10 ஏக்கர் பரப்பில், பூர்வீக தொழிலான விவசாயத்தை ஆரம்ப காலத்தில் பார்த்து வருகின்றனர். தற்போது கிணற்றுப்பாசனத்தின் மூலம் 500 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீக்குச்சி மரங்கள், ரோஸ்வுட் மரங்கள், முள் இல்லாத மூங்கில் மரங்களை பயிரிட்டுள்ளனர்.. தவிர கத்திரிக்காய், வெண்டைக்காய், கீரை வகைகள், சுரைக்காய் ஆகியவைகளோடு மருத்துவக்குணங்கள் கொண்ட கற்றாழைகளையும் வளர்த்து வருகிறார்கள்…
விவசாயத்திற்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில், அதை கைவிட விரும்பாமல், தள்ளாத வயதிலும், தாங்களே களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். கால்வாய் சீரமைப்பு, தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், தேங்காய் பறித்தல் மட்டுமில்லாமல், டிராக்டரையும் தாங்களே ஒட்டி அசத்தி வருகின்றனர்.
79 வயதாகும், அம்மையக்காள் , விவசாயத்தை புனிதமான தொழிலாக கருதி, இன்றும் டிராக்டர் ஒட்டி அசத்தி வருகிறார். கடந்த 30 வருடங்களாக டிராக்டர் ஒட்டி வரும் அம்மையக்கா இன்றும் விவசாயத்திற்காகவே, தனது வாழ்வினை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார்..
தன்னை போலவே, அனைவரும் வயது வரம்பின்றி விவசாயத்திற்காகவும், இயற்கைக்காகவும் வாழ வேண்டுமென்று அறிவுரை கூறுகிறார். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலம் மாறி தற்போது கப்பல் முதல் விமானம் வரை அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அந்த பட்டியலில், அம்மையக்காள் ஒரு மணிமகுடம்..
Discussion about this post