நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் மாணவன் உதித் சூர்யாவுக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அவரை சிபிசிஐடி முன் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். நீட் தேர்வு நுழைவுச்சீட்டில் இருந்த அவர் படத்துக்கும் உண்மைத் தோற்றத்துக்கும் பெரிய வேறுபாடு இருந்ததைக் கண்ட மற்ற மாணவர்கள் இதுகுறித்துக் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தனர். மாணவனையும் பெற்றோரையும் அழைத்துக் கல்லூரி முதல்வர் விசாரித்ததில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து க.விலக்கு காவல்நிலையத்தில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் உதித் சூர்யா மீது ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கல்லூரிக்குச் செல்லாமல் தலைமறைவான அவரைப் பிடிக்கத் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆள்மாறாட்ட வழக்கில் முன்ஜாமின் வழங்கக் கோரி உதித்சூர்யா சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், ஆள்மாறாட்டம் செய்ததை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்ஜாமின் அளிக்க மறுத்ததுடன், சிபிசிஐடி முன் சரணடைய உத்தரவிட்டார். சிபிசிஐடி முன் ஆஜரானால் முன்ஜாமின் மனுவை ஜாமின் மனுவாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததுடன் விசாரணையை அக்டோபர் ஒன்றாம் தேதிக்குத் நீதிபதி ஒத்திவைத்தார்.
Discussion about this post