ஊழல் புகாரால் ஆட்சியை இழந்த திமுக, தற்போது சிறப்பான ஆட்சியை வழங்கும் நம்மை விமர்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் பேருந்துநிலையம் அருகே காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சியில் அண்ணா பிறந்த விழா பொதுக்கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். காவிரி பிரச்சனையில் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றம் மூலம் வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். எம்.ஜி.ஆர். ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும், தற்போது உள்ள ஆட்சியிலும் சட்டம்- ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.
ஆட்சியில் இல்லாதபோது, தற்போது திமுகவினரின் செயல்களை மக்கள் அறிவார்கள் என முதலமைச்சர் குறிப்பிட்டார். சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணிக்காக ஓட்டல் உரிமையாளரை தாக்கியது, வேலூரில் செல்போன் வாங்கிவிட்டு கடை உரிமையாளரை தாக்கியது, பெரம்பலூரில் அழகுநிலையத்தில் பெண்ணை அடித்து உதைத்தது என்று திமுகவினரின் அராஜகங்களை முதலமைச்சர் பழனிசாமி பட்டியலிட்டார்.
கடந்த காலங்களில் நெடுஞ்சாலைத்துறையில் திமுக ஆட்சியில் எந்த அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டதோ, அதே அடிப்படையில், ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு, அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித்தர வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Discussion about this post