தண்ணீர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், இளைஞர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அந்த வழியாக வந்த நாமக்கல் எம்.பி சின்ராஜ், காயமடைந்த இளைஞரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மல்லூர்பகுதியைச்சேர்ந்த கூலித்தொழிலாளியான இளைஞர் கார்த்திக் தனது சகோதரி மற்றும் அவருடைய குழந்தையுடன் இருசக்கரவாகனத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலிருந்து மல்லூர்நோக்கி சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார்த்திக்கின் இரண்டுகால்கள் நசுங்கி ரத்தம் சொட்ட சொட்ட படுகாயங்களுடன் விபத்து நடந்த இடத்தில் அமர்ந்திருந்தார். உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்து விட்டு காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நாமக்கல் எம்.பி சின்ராஜ் காரில் இருந்து இறங்கி காயமடைந்த இளைஞரை பார்த்தார். ஆனால் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்காமல் செல்போன் பேசுவதில் கவனம் செலுத்தினார்.
ஆம்புலன்சு வர தாமதமானதால் இளைஞர் அதிக ரத்த போக்குடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் எம்.பி சின்ராஜ் இளைஞரை மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் ரத்தப்போக்கு ஏற்படாமல் தடுத்திருக்கலாம் என அங்கிருந்த பொதுமக்கள் எம்பி மீது அதிருப்தியடைந்தனர். ஆம்புலன்சு தமதானதால் சுமார் அரைமணிநேரத்திற்கும் மேலாக இளைஞர் உயிருக்கு போராடியதை எம்.பி சின்ராஜ் அருகே இருந்து வேடிக்கை பார்த்த சம்பவம் அனைவருடைய நெஞ்சத்தையும் பதபதக்க வைத்துள்ளது.
Discussion about this post