சந்திரயான் 2 விண்கலம், 5 சதவீதம் மட்டுமே பின்னடைவை சந்தித்திருப்பதாகவும், 95 சதவீதம் வெற்றி தான் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து, செப்டம்பர் 2 ஆம் தேதி, லேண்டர் பிரிந்தது. இதையடுத்து, லேண்டரும், ஆர்பிட்டரும் தனித்தனியாக நிலவைச் சுற்றி வந்தன. இந்நிலையில், லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது. ஆனால், தற்போது லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்பிட்டர் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆராய்ச்சிக்கான பெரும்பாலான கருவிகள் ஆர்பிட்டரில் இருப்பதால், சந்திரயான் 2 திட்டம் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான் – 2 திட்டத்தில், விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியின் போது, நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் லேண்டர் இருந்த வரை தகவல் தொடர்பு இருந்ததாகவும், அதையடுத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பை லேண்டர் இழந்ததாக, சந்திரயான்-2 திட்ட இயக்குநர் சிவன் தெரிவித்தார்.
பின்னர், பெங்களூர் இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிவிட்டு கிளம்பிய பிரதமர் மோடியிடம், இஸ்ரோ தலைவர் சிவன் கண்கலங்கி தனது மனநிலையை வெளிப்படுத்தினார். பிரதமர் மோடி, சிவனை ஆரத் தழுவி, தேற்றி, ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.
சந்திரயான் 2 விண்கலம் ஏவப்பட்டதிலிருந்து, வெற்றிகரமாக தன்னுடைய பயணத்தை பூர்த்தி செய்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள விஞ்ஞானிகள், ஆர்பிட்டர் 365 நாட்களுக்கு தொடர்ந்து ஆய்வில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post