சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை கருமேகங்கள் சூழ மழை பெய்தது.
சென்னையில், வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை முதல், இடி, மின்னலுடன், கரு மேகங்கள் சூழ மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, பாரிமுனை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 2.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வெப்பசலனம் காரணமாக மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, தருமபுரி மாவட்டத்திலும், பல்வேறு பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இரு தினங்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில், இந்த திடிர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. குடிமராமத்துப்பணியின் கீழ் வேலைகள் நடைபெற்று வருவதால், பெய்த மழைநீர், அனைத்து நீர்நிலைகளிலும், நீர் உயர்வதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளர். இதனால், தமிழக அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றியை தெரிவித்தனர்.
Discussion about this post