திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் மோகனா. ரயில்வே ஊழியரான இவருடைய கணவர் பெயர் ரூகேஷ் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மோகனாவும், ரூகேஷும் ஒரே இடத்தில் தான் வேலை செய்ததால், ஒருவர் வீட்டில் இருந்தால், மற்றொருவர் பணியில் இருக்கும் சூழலில் தான், அவர்களின் இல்வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
இந்தநிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி ரயில்வே கேண்டீனில் டீ விற்பனை செய்து வந்தார். இவருக்கும், மோகனாவுக்கும் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி ஒருகட்டத்தில் எல்லையை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் வீராசாமியோடு தங்கியுள்ளார் மோகனா. அறைக்குள் சென்ற அவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவலர்கள் முன்னிலையில் அறை கதவை உடைத்தபோது, மோகனாவின் உடல் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது சம்பந்தமாக காவல்துறையினர், வீராசாமியை கைது செய்தனர். கொலையை ஒப்புக் கொண்ட அவர், லாட்ஜில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
வீராசாமியுடன் லாட்ஜ் அறையில் இருந்தபோது, கணவரிடம் பேசுவதாக கூறிய மோகனா, யாரோ ஒருவருடன் அடிக்கடி செல்ஃபோனில் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். ஏற்கனவே கஞ்சா போதையில் இருந்த வீராசாமிக்கு, மோகனாவின் நடவடிக்கைகள் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆத்திரத்தில் மோகனாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதை தற்கொலை போல் சித்தரித்துவிட்டு தப்பிச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார், வீராசாமி.
அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். திருமணத்தை மீறி மோகனா ஏற்படுத்திக் கொண்ட ஓர் உறவு, அவரின் உயிரையே பலி வாங்கிவிட்டதாக கூறியுள்ளது காவல்துறை.
Discussion about this post