தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.
இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகம் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கபட்டது. அதே சமயம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என தமிழக அரசுக்கு தேசியபசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. இதேபோல், ஸ்டெர்லைட்ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள அனுமதியும் வழங்கிய பசுமை தீர்பாயம் அதை இயக்க அனுமதியில்லை என உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னர், ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்தது. இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பசுமை தீர்பாயத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
Discussion about this post