காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என மூத்த நிர்வாகிகளிடம் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் உள்ளது. ஆனால், ராகுல் காந்தி தலைவராக இருக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும், அவர் தனது முடிவை மாற்றாமல் உறுதியாக இருந்து வருகிறார்.
காங்கிரஸ் காரிய கமிட்டியை விரைவில் கூட்டி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பிரியங்கா காந்தி தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், எம்.பி. சசிதரூர் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தாள் கொண்டாட்டம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கூட்டம் வியாழன்று நடந்தது. அப்போது தலைவர் பதவியை பிரியங்கா ஏற்க வேண்டும் என பொதுச்செயலாளர்கள் கூறியதாகவும், ஆனால் தலைவர் பதவிக்கு தன்னை பரிந்துரைக்க வேண்டாம் என பிரியங்கா காந்தி தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு காரிய கமிட்டியை காங்கிரஸ் கூட்ட உள்ளதால் காங்கிரஸ் தலைமை பொறுப்பை யார் எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Discussion about this post