காடுகளில் வளரும் செடிகளுக்கும் மரங்களுக்கும் யாரும் தோட்ட வேலைகளைச் செய்வதில்லை. அவற்றுக்கு உரமோ, பூச்சிக் கொல்லியோ தேவைப்படுவதில்லை.
அதுபோலவே விவசாயிகள் தங்கள் பயிர்களை விளைவித்தால் அவர்களின் இடுபொருள் செலவு பூஜ்ஜியம் ஆகும். இதுவே ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஜீரோ பட்ஜெட் விவசாயம் விவசாயிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது எளிமையானது அல்ல.
ஜீரோ பட்ஜெட் விவசாயம் – விவசாயிகளின் பணத்தைக் கேட்பது இல்லை என்றாலும் அவர்களின் உழைப்பையும் கவனிப்பையும் கேட்கக் கூடியது. பயிர்களின் விளைச்சலை மேம்படுத்த, மண்ணில் நுண்ணுயிர்களை அதிகரிப்பதும் மண்ணை நொதிக்க வைப்பதும் தேவைப்படுகின்றன.
இதனை சாணம், கோமியம் இவற்றாலான ஜீவாம்ருதத்தைக் கொண்டு விவசாயிகள் செய்யலாம். இம்முறையில் 30 ஏக்கர் நிலத்தை வளப்படுத்த ஒரு மாடும் கொஞ்சம் உழைப்பும் மட்டும் போதும். மண் வளத்தை அதிகரிக்கவும், பூச்சிகளை கட்டுப்படுத்தவும் இப்படிப் பல இயற்கை சார்ந்த வழிமுறைகள் உள்ளன. இவற்றை நோக்கி விவசாயிகள் நகரத் தேவை ஏற்படும்.
இந்த ஜீரோ பட்ஜெட் விவசாயம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுமா? – என்றால் அதன் பதில் சிக்கலானது. ஏனென்றால் 1960கள் வரை இந்திய மக்கள் ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான் செய்து வந்தார்கள். இதனால் இந்தியா குறைவான உற்பத்தியையும் அடிக்கடி பஞ்சங்களையும் கண்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மட்டும் இந்தியாவில் 24 பெரிய பஞ்சங்கள் ஏற்பட்டன. மக்கள் கோடிக் கணக்கில் இறந்தனர். 1930 வரையில் இந்திய மக்களில் மூன்றில் ஒருவருக்கு சத்தான உணவு இல்லை. 1960 வரையில் அரிசி என்பது இந்தியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே உரிய உணவாக இருந்தது.
பசுமைப் புரட்சிக்குப் பின்னர்தான் இந்தியாவில் பஞ்சங்கள் மறைந்தன. சத்தான உணவு அனைவரும் எட்டும் நிலைக்கு வந்தது. அரிசி சோறு அனைவருக்கும் சாத்தியமானது. எனவே மீண்டும் மொத்த நாடும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்திற்கு மாறுவது அவ்வளவு எளிதானது அல்ல.
ஆனால் இன்னொரு பக்கம், நவீன வேளாண்மையில் வரும் உணவில் நஞ்சுக் கலப்பும், பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் சூழல் மாசுபாடும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நஞ்சற்ற உணவு – என்பதும் மக்களின் முக்கியத் தேவையாகி உள்ளது. அதனால்தான் மரபு வழி விவசாயத்தை நோக்கி மக்கள் வருகிறார்கள். ஆர்கானிக் பொருட்களை 2 மடங்கு விலைக்கு வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
இதனால் நிதி ஆயோக் தற்போது ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்கிறது. ஆந்திர மாநிலம் ‘2024ல் 100சதவிகித ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ என்ற இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கி உள்ளது. இவற்றின் விளைவுகளைப் பொருத்தே மற்ற மாநிலங்களால் முடிவுகளை எடுக்க முடியும்.
இந்திய அரசு மக்களின் தேவையையும், விவசாயிகளின் நலனையும் ஒரே சமயத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய நிலையில் இப்போது உள்ளது. இதனால்தான் மத்திய நிதியமைச்சரின் உரையும் உற்று நோக்கப்படுகிறது. ஆரோக்கியமான ஆர்கானிக் உணவுகள் அனைவருக்குமானதாக மாறுமா ? – என்பதை காலம்தான் சொல்லும்.
Discussion about this post